இணையம் வழியாக வாசனைகளைக் கண்டறிந்து, அவற்றைத் தொலைதூர இடங்களில் மீண்டும் உருவாக்கக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் காணொளி அழைப்புகளின்போதும், இணையவழி பொருள் கொள்வனவின்போதும் வாசனைகளை அனுபவிக்கக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் ஒஹையோ மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சீனாவைச் சேர்ந்த ஆய்வுக் குழுக்களுடன் இணைந்து Scentronic எனப்படும் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வாசனைகளை அடையாளம் கண்டு, அவை தொடர்பான தகவல்களை இணையம் வழியாக அனுப்புவதே இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சமாகும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டமைப்பில், வாயுக்களைக் கண்டறியும் உணரிகளைக் கொண்ட மின்னணு மூக்கு மற்றும் வாசனைகளை அடையாளம் காணும் இயந்திரக் கற்றல் முறைமை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வாசனை தொடர்பான தகவல்கள் இணையம் வழியாகப் பெறும் சாதனத்துக்கு அனுப்பப்படுகின்றன. பின்னர், அந்தச் சாதனம் வாசனை மூலக்கூறுகளை வெளியிட்டு, அசல் வாசனையை மீண்டும் உருவாக்குகிறது.
கோப்பி, கேக், தோடம்பழம், பியர் மற்றும் சிவப்பு வைன் ஆகிய ஐந்து வகையான பரிச்சயமான வாசனைகளைக் கொண்டு இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. 14 தன்னார்வப் பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய பரிசோதனையொன்றில், மீண்டும் உருவாக்கப்பட்ட வாசனைகளை அவர்கள் சுமார் 73 சதவீத சந்தர்ப்பங்களில் சரியாக அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால், வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உணவின் வாசனையைப் பகிர்ந்துகொள்வது, காணொளி உரையாடல்களின்போது குறிப்பிட்ட வாசனைகளை அனுபவிப்பது, இணையவழியில் வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏனைய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் அவற்றின் வாசனையை அறிந்துகொள்வது போன்ற புதிய அனுபவங்கள் சாத்தியமாகலாம். மேலும், மணிக்கட்டுப் பட்டைகள் மற்றும் கழுத்தணிகள் உள்ளிட்ட உடலில் அணியக்கூடிய வாசனையை உருவாக்கும் சாதனங்களையும் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
எனினும், இந்தத் தொழில்நுட்பம் இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளது. தற்போது அனைத்து வகையான வாசனைகளையும் இதன் மூலம் மீண்டும் உருவாக்க முடியாது. குறிப்பிட்ட வாசனையை உருவாக்குவதற்குத் தேவையான வாசனைத் திரவங்கள், வாசனையை வெளியிடும் பெறும் சாதனத்தில் இருக்க வேண்டியது அவசியமாகும்.
வாசனைகளைக் கண்டறியும் வரம்பை விரிவுபடுத்துதல், துல்லியத்தை மேம்படுத்துதல் மற்றும் சிறிய, நடைமுறைக்கு ஏற்ற சாதனங்களை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் Science Advances என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.










