விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகளால் இரண்டு கத்திகளுடன் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர், பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமையகத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவித்த பலாங்கொடை கஸ்ஸப தேரரின் கருத்துக்கு எதிராக, ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
குறித்த முறைப்பாடு ஒக்டோபர் நேற்று வெள்ளிக்கிழமை கறுவாத்தோட்டம் பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு கத்திகளுடன் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபருக்கும், பெலவத்தை ஜே.வி.பி. தலைமையகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அக்கட்சி மறுத்துள்ளது.
CIB II 289/237 என்ற இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில், பலாங்கொடை கஸ்ஸப தேரரால் தெரிவிக்கப்பட்ட கருத்து பொய்யானது எனவும், அது பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அடிக்கடி வருகை தரும் பெலவத்தை தலைமையகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும் கட்சி கவலை வெளியிட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ள ஜே.வி.பி, அதற்குச் சான்றாகக் கருதப்படும் காணொளிப் பதிவுகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளையும் பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளது.










