சேவல்கள் சிறை வைப்பு : நீதிமன்றத்தின் கட்டளைக்காக காத்திருக்கும் பொலிஸார்

இந்தியா- ஒரிசா மாநிலத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் 4 சேவல்களை தடுத்து வைத்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

ஒரிசா மாநிலம் பாலோசர் மாவட்டத்தின் முருனா என்ற பகுதியில் டிசம்பர் மாத இறுதியில் சேவல் சண்டனை நடத்துவதை அப்பகுதியினர் வழக்கமாக கொண்டுள்னர்.

இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் தொடங்கி புத்தாண்டு வரை இந்த சேவல் சண்டை இந்த கிராமப் பகுதிகளில் நடைபெறுகின்றன. விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இங்கு சேவல் சண்டைகளுக்கு சட்ட ரீதியான தடை உள்ள போதிலும் , பொலிஸ் அனுமதி இல்லாமல் பலர் சட்ட விரோதமாக இதை நடத்தி வருகின்றனர்.

சேவல் சண்டை போட்டி முடிந்தவுடனே அப்பகுதி மக்கள் அதை கறி சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தாண்டும் இதுபோன்ற சேவல் சண்டை சட்ட விரோதமாக நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் முருனா பஜார் பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட திட்டமிட்டிருந்த 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 4 சேவல்களை மீட்டுள்ளனர்.

சண்டைக்கு தயார் நிலையில் இருந்த இந்த சேவல்களை பிடித்து வந்து சிமுலியா பொலிஸ்; நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். இந்த சேவல்கள் சுமார் 3 நாள்களாக பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவற்றை பராமரிக்க ஒரு நபரை நியமித்து அதற்கு உணவு கொடுத்து பாதுகாத்து வருகின்றனர்.

கைதானவர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சேவல்கள் குறித்த அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என தெரியவருகின்றது.