யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்து , பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த டொல்பின் ரக வாகனம் தொடர்பில் பொலிஸார் விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளாலி பகுதியில் இருந்து அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இரண்டு டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றி வருவதாக , சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கொடிகாமம் – புத்தூர் வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் போது குறித்த இரண்டு டிப்பர் வாகனமும் அவ்வீதியூடாக வந்த போது அதனை வழி மறித்துள்ளனர். டிப்பர் சாரதிகள் பொலிசாரின் கட்டளையை மீறி தப்பியோடியுள்ளனர்.
அதனை அடுத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை மடக்கி பிடிக்கும் நோக்குடன் துரத்தி சென்ற வேளை , குறித்த இரண்டு டிப்பர் வாகனங்களுக்கும் பாதுகாப்பாக பின் தொடர்ந்து வந்த டொல்பின் ரக வாகனம் , பொலிஸார் டிப்பர் வாகனத்தை நெருங்க விடாது , போக்குவரத்திற்கு இடையூறாகவும் , ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி சென்றனர்.
இருந்த போதிலும் , வாகனங்களை இடைவிடாது பொலிஸார் தொடர்ந்து பின் தொடர்ந்த நிலையில் ஒரு டிப்பர் வாகனத்தை மடக்கி பிடித்து , அதன் சாரதியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதியையும் மீட்கப்பட்ட டிப்பரையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை , தப்பி சென்ற மற்றைய டிப்பர் வாகனம் தொடர்பில் , டிப்பர் வாகனத்திற்கு பாதுகாப்பாக பின் தொடர்ந்து , போக்குவரத்திற்கு இடையூறாகவும் , ஆபத்தான முறையில் வீதியில் வாகனம் செலுத்தி சென்றமை , பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக டொல்பின் வாகனம் தொடர்பிலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.