ரியாத் – வெள்ளிக்கிழமை வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தொடரும் எனவும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளம் வர வாய்ப்புள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறும் சவூதி அரசின் பொது குடிமைப் பாதுகாப்பு நரகம் வலியுறுத்தியுள்ளதாக சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகளை மேற்கோள் காட்டி, மக்கா, ரியாத், மதீனா, காசிம், ஹெய்ல், தபூக், கிழக்கு மாகாணம், வடக்கு எல்லைகள், ஜௌஃப், அல்-பஹா, அஸீர், ஜஸான் மற்றும் நஜ்ரான் உள்ளிட்ட பல பிராந்தியங்களில் மிதமான முதல் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த வானிலையால் திடீர் வெள்ளம், ஆலங்கட்டி மழை மற்றும் வலுவான கீழ்நோக்கிய காற்றோட்டங்களைத் தூண்டக்கூடும். இவை பார்வைத்திறனைக் குறைக்கும் தூசி மற்றும் மணல் புயல்களை உருவாக்கும் திறன் கொண்டவை.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிக்கும் அதே வேளையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், வெள்ளம் வர வாய்ப்புள்ள இடங்களைத் தவிர்க்குமாறும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீந்துவதைத் தவிர்க்குமாறும் குடிமைப் பாதுகாப்புத் துறை வலியுறுத்தியுள்ளது.
வார இறுதியில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த வானிலை எச்சரிக்கைகளுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை, வானிலை ஆய்வு மையம் மதீனா பிராந்தியத்திற்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்தது. அதில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் பார்வைத் திறன் கிட்டத்தட்ட இல்லாத நிலையில் தூசி ஆகியவை நிலவும் என முன்னறிவிக்கப்பட்டது. இதேபோன்ற வானிலை நிலவரங்கள் மற்ற பிராந்தியங்களிலும் காணப்பட்டன பரவலான மழை மற்றும் புழுதியைக் கிளப்பும் காற்று வீசியதாகத் தெரிவிக்கப்பட்டது.