கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் திட்டம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தில் வெருகல், மூதூர் மற்றும் குச்சவெளிப் பகுதிகளிலுள்ள பின்தங்கிய கிராமங்களில் கல்வி கற்று வரும் மாணவர்களின் கல்வி மேம்படுத்தும் நோக்கில் திருகோணமலை மாவட்ட நலம்புரிச் சங்கம் விசேட செயற்திட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றது.

மாவட்டத்தில் பின் தங்கிய கிராமங்களில் வாழும் மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்பு இல்லை. பழைய முறையில் விவசாயம் செய்தல் , பிறருக்கு மந்தை மேய்த்தல் முதலிய தொழில்களைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள், கல்விக்கு முதன்மை அளிப்பதில்லை. இம்மக்கள் மிகக் குறைந்த சமூகப் பொருளாதார நிலையில் உள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் வறுமையில் வாழ்ந்து வரும் குடும்பங்களில் கல்வி செயற்பாடுகளில் அக்கறையுள்ள மாணவர்களை தெரிவு செய்து உவர்மலை விவேகானந்தா தேசிய பாடசாலையில் அனுமதித்து குறித்த மாணவர்களுக்கு இலவசமாக விடுதி வசதிகளையும் வழங்கி இலவசமாக கல்வியை வழங்கி வருகின்றது.

குறித்த செயல் திட்டத்தினை திருகோணமலை மாவட்ட நலம்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ்.குகதாஸன் முன்னெடுத்து வருகின்றார்.

இத்திட்டத்தின் ஊடாக வறுமையில் வாழ்ந்து கல்வியை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்த மாணவர்கள் பாடசாலை விடுமுறை தினத்தின் இறுதி நாள் பல்வேறுபட்ட கருத்துக்களையும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினர்

இம்மாணவரைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பித் துறைசார் வல்லுநர்களாக உருவாக்கி, அவரவர் ஊருக்குத் திருப்பி அனுப்பி, அவ்வூர்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என திருகோணமலை மாவட்ட நலம்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ்.குகதாஸன் தெரிவித்தார்.