காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழப்பு

சென்னை-  நெல்லை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே லெப்பைக் குடியிருப்பை சேர்ந்த நித்திஷ்(வயது-7) , நிதிஷா(வயது-5) மற்றும் உறவினரான ஒருவரின் மகன் கபிலன் (வயது-4) ஆகியோர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

மூன்று நாட்களாக கார் குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிக உஷ்ணம் காருக்குள் இருந்துள்ளதோடு ஆக்சிஜன் குறைவாகவும் இருந்துள்ளது. காரின் கதவைத் திறந்து உள்ளே சென்று காருக்குள் விளையாடி கொண்டிருந்தபோது, அவர்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியில் வர முயற்சித்த நிலையில் கதவுகளின் இறப்பர் பகுதிகள் இறுகிய நிலையில் வர முடியாமல் போயுள்ளது.

வெகு நேரமாக குழந்தைகளை காணாமல் தேடிய பெற்றோர் குழந்தைகள் காருக்குள் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அவர்களை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகளின் தோலில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. உஷ்ணம் தாங்காமல் குழந்தைகள் வாந்தி எடுத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பணகுடி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

காருக்கு சிக்கி மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.