கண்டி மெனிக்ஹின்ன வைத்தியசாலை வளாகத்தில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுவொன்று வரவழைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவின் போது காயமடைந்த நபரொருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையின் பணிக்குழாமினரும் புத்தாண்டு விழாவில் பங்கேற்றிருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்க காலதாமதமாகியுள்ளது.
இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்களுக்கும் காயமடைந்த தரப்பினருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்று பின்னர் மோதலாக உருவெடுத்துள்ளதுடன், இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் ஐவர் மெனிக்ஹின்ன வைத்தியசாலையின் ஊழியர்கள் எனவும் இரு தரப்பினரையும் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், வைத்தியசாலை வளாகத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் மெனிக்ஹின்ன பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்