நடப்பு 2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கையின் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் தேங்காய் துறை மூலமான ஏற்றுமதி வருவாய் 21.38% இனால் அதிகரித்து 406.28 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் இலங்கைத் தயாரிப்புகளுக்குக் காணப்படும் பலத்த தேவையும், பாரம்பரியமாக முழுத் தேங்காய்களை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக அதிக மதிப்பு கூட்டப்பட்ட (Value-added) நவீன தயாரிப்புகளுக்கு மாறியதுமே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேங்காய் கைத்தொழில்துறையின் அனைத்து முக்கிய பிரிவுகளும் இந்த ஆண்டு அசுர வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளன.
தேங்காய் எண்ணெய் (Coconut Oil): 26.09% இனால் ஏற்றுமதி அதிகரிப்பு.
உலர்ந்த தேங்காய் (Desiccated Coconut): 38.8% இனால் பாரிய உயர்வு.
தேங்காய் கிரீம் (Coconut Cream): 24.48% இனால் அதிகரிப்பு.
தேங்காய் சிரட்டையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் அதீத தேவை காரணமாக 49.38% இனால் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தேங்காய் சார்ந்த தயாரிப்புகளுக்கு சர்வதேச சந்தையில் குறிப்பாக இயற்கை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆரோக்கிய உணவுத் துறைகளில் கேள்வி அதிகரித்துள்ளது.
இந்த உலகளாவிய தேவையை நிறைவு செய்யும் நோக்கில், உள்நாட்டுத் தேங்காய் உற்பத்தியை 4.2 பில்லியன் வரை அதிகரிக்கும் இலக்குடன் உர மானியங்கள் மற்றும் மறுசெய்கைத் திட்டங்களுக்காக அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.