மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது என கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல்கள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக, இன்றைய அமைச்சரவை ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும், அதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தேர்தலை நடத்துவதற்கு பிரதான தடையாக இருப்பது சட்டம் சார்ந்த விவகாரங்களே என அவர் தெரிவித்தார்.
இந்த சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தற்போது நாடாளுமன்றக் குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
தேவையான சட்டக் கட்டமைப்பு தயார் செய்யப்பட்டவுடன், மாகாண சபை தேர்தலை மிக விரைவில் அரசாங்கத்தால் நடத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
“இந்த அரசாங்கம் ஏற்கனவே எட்டு மாதங்களுக்குள் இரண்டு தேர்தல்களை நடத்தியுள்ளது. அரசியலமைப்பிற்கு இணங்க மக்களின் இறையாண்மையைப் பாதுகாத்து மாகாண சபை தேர்தலை நடத்துவதே எங்களது எதிர்பார்ப்பு” என அவர் கூறினார்.
மேலும், நிதி ஒதுக்கீடு செய்யப்படாத பட்சத்தில் கூட, தேவைப்பட்டால் துணை மதிப்பீடு மூலம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் அமைச்சர் ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.