-வவுனியா நிருபர்-
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த, வவுனியா- ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவர் வைத்தியசாலையில் ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையில் இருந்து விடுகை பெறாது இரவு தப்பி வீடு நோக்கி சென்றுள்ளார்.
இந்நிலையில், வவுனியா கோவில்புதுக்குளம், ராணிமில் சந்தியில் உயிரிழந்த நிலையில் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
வீதியால் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏறடபடுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், இதன் காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்தும் வவுனியா பொலிஸார் மற்றும் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
