-பதுளை நிருபர்-
பதுளையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணிக்க தயாராக இருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் ஏறிய பெண்ணொருவர் மீது நடத்துனர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
பதுளை – பசறை 3 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 39 வயதான குறித்த பெண்ணின் நெஞ்சு பகுதியை பிடித்து நடத்துனர் தள்ளியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள அவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு மருந்து எடுப்பதற்காக வருகை தந்த பெண்ணே இவ்வாறு பேருந்தில் இருந்து தள்ளப்பட்டுள்ளார்.
“எனக்கு உடல்நிலை சரியில்லை கால்கள் அதிக வலியாக இருந்தது. அதனால் பேருந்தில் ஏறி சீட்டில் அமர்ந்தேன்.
அப்போது நடத்துனர் என்னை கீழே இறங்குமாறு வற்புறுத்தினார் அதன்பின் எனது நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டார்.
நடத்துனர் என்னை பிடித்து தள்ளியதை எனது கணவர் கேட்ட போது அவர் எனது கணவரை டிக்கெட் அச்சிடும் இயந்திரத்தினால் தாக்கினார்.
அதனை எனது மகன் வீடியோ எடுத்த போது மகனுடைய கைபேசியை பறித்து வீடியோவை அழித்து விட்டனர், என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்