ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கும் டயலொக் ஆக்சியாட்டாவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னிலையில், ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளைக்கும் (IIT Madras Pravartak Technologies Foundation) டயலொக் ஆக்சியாட்டா நிறுவனத்திற்கும் (Dialog Axiata) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
சர்வதேச ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இலங்கையின் கைத்தொழில் துறை மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதற்கான ஒத்துழைப்புக் கட்டமைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துகிறது.
இந்தக் கூட்டாண்மையின் கீழ் ஐந்து முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவை புத்தாக்கம் மற்றும் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குதல், பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட தீர்வுகள், கைத்தொழில் திறன்கள் மற்றும் திறமையாளர்களின் மேம்பாடு, அத்துடன் சர்வதேச அறிவுப் பரிமாற்றம் ஆகியவையாகும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் எம். ஜே. சங்கர் ராமன், டயலொக் ஆக்சியாட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுபுன் வீரசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்திய உயர்ஸ்தானிகர் டயலொக் ஆக்சியாட்டா நிறுவனத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது தொழில்நுட்பம், வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் நம்பகமான கூட்டாண்மை ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கைச்சாத்திடல், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி, அபிவிருத்தி (R&D) கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.










