மாலைதீவு அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, 50 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
குறித்த மருந்துப் பொருட்களைக் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத்திடம் மருந்துப் பொருட்களைக் கையளித்தார்.
மாலைதீவின் சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீலா அலியின் கோரிக்கைக்கு அமைய இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்துப் பொருட்கள் விநியோகப் பிரிவு, அரச மருந்துப் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த மருந்துத் தொகுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத், இந்த நன்கொடையை வழங்கிய இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவு மற்றும் நெருங்கிய இருதரப்பு உறவுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கையளிப்பு நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.










