சவூதி அரேபியா இராச்சியத்தின் 96ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு வரவேற்பு நிகழ்வில், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் கலந்து கொண்டார்.
இந்நிகழ்விற்கான அழைப்பை இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகத்தின் பொறுப்பதிகாரி யாசர் அப்துல்ரஹ்மான் அல்-ஹஸ்மி (H.E. Yaser Abdulrahman Al-Hazme) விடுத்திருந்தார்.
இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித்தை, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சந்திப்பின்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் விடுதலைக்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்குவதாக ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் சாணக்கியனிடம் உறுதி அளித்தார்.
இந்நிலையில், சவூதி அரேபியா இராச்சியத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு சவூதி அரேபிய மக்களுக்கும், இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகத்திற்கும் சாணக்கியன் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.









