அரசாங்கம் அதிக விலைக்கு யூரியா உரத்தைக் கொள்முதல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை தேசிய உரச் செயலகம் முற்றாக நிராகரித்துள்ளது.
தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் பிரதிநிதியொருவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையே செயலகம் இவ்வாறு தள்ளுபடி செய்துள்ளது.
கசகஸ்தானில் இருந்து குறைந்த விலைக்கு (மெற்றிக் தொன் ஒன்றுக்கு 220 முதல் 320 அமெரிக்க டொலர்கள் வரை யூரியா உரத்தை இறக்குமதி செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தபோதிலும், அரசாங்கத்தின் அனுமதியுடன் நிறுவனங்கள் 800 அமெரிக்க டொலர் வரையான அதிக விலைக்கு உரத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
கசகஸ்தானில் இருந்து உரத்தை இறக்குமதி செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்குத் தாமதமின்றி அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எந்தவொரு நிறுவனமும் அந்த அனுமதியின் கீழ் யூரியா உரத்தை இறக்குமதி செய்யவில்லை என்றும் செயலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
செயலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கஜகஸ்தானில் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் பலவற்றில் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலோன் டிரேடிங் அண்ட் பிளாண்டேஷன் (பிரைவட்) லிமிடெட் நிறுவனம் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி 25,000 மெற்றிக் தொன் யூரியா உரத்திற்கான கட்டளையைச் (Order) சமர்ப்பித்துள்ளது.
குறித்த உரம் அடங்கிய கப்பல் இன்னும் இலங்கையை வந்தடையவில்லை எனத் தேசிய உரச் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.