சுவிட்சர்லாந்து விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் , பாஃபிகான் (Pfäffikon) பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
பாஃபிகான் கெம்ப்ட்டால்ஸ் (Kempttal) வீதியில் இந்த விபத்து அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருள் விநியோகத்தில் ஈடுபடும் 53 வயது வேன் ஓட்டுநரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை வேளை வீதிக்கு அருகில் இருந்த மரத்தில் வேன் மோதிய நிலையில் அவசர சேவை பிரிவினர் உடனடியாக மயக்கமடைந்த நிலையில் இருந்த வேனின் ஓட்டுநருக்கு முதலுதவி அளித்துள்ள போதிலும் , இலங்கையைச் சேர்ந்த 53 வயது நபர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி குறித்த நபர் பெஹ்ரால்டோர்ஃப் (Fehraltorf) பில் இருந்து பாஃபிகான் (Pfäffikon) நோக்கி வேனில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு மரத்தில் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து மாநில காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தால் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
