கந்த சஷ்டி விரதம்

✨கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர்.

✨சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும்  உண்டு.

✨சூரபத்மன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவபெருமானிடம் சில வரங்களை பெற்றான். அதன்படி, இந்த உலகில் தன்னை எவரும் வெல்லக்கூடாது, ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த பிள்ளையால் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என்ற வரங்களை பெற்றிருந்தான்.

✨வரங்களை பெற்ற சூரபத்மன் ஆணவம் கொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனை பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுதலை கேட்ட ஈசன், சூரபத்மனை வதம் செய்ய தனது ஐந்து முகம் மற்றும் அதோ முகம் என்ற ஆறுமுகத்துடன் தோன்றி தனது நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகளால் 6 குழந்தைகளை உருவாக்கினார்.

✨பார்வதி தேவி அந்த குழந்தைகளை கண்டு மகிழ்ந்து தனது திருக்கரங்களால் ஒரு சேர தழுவி ஒரு குழந்தை ஆக்கினார். அந்த குழந்தை அழகாக இருந்ததால் அழகன் முருகன் என்றும், ஆறுமுகத்துடன் இருந்ததால் ஆறுமுகம் என்றும், கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் தெய்வீகம், இனிமை, இளமை, மணம், மகிழ்ச்சி, அழகு என்ற 6 தன்மைகளுடன் திகழ்கிறார். ஆணவம் மிகுந்த சூரனை முருகபெருமான் 6 நாள் போருக்குப்பின் சம்ஹாரம் செய்தார்.

✨சூரசம்ஹாரத்தின்போது சூரபத்மன் மீது முருகபெருமானின் வேல் பாய்ந்ததும், அவனிடம் இருந்த அஞ்ஞானம் மறைந்து மெய்ஞானம் வரப்பெற்றான். உடனே அவனை அழிக்காமல் சேவலாகவும், மயிலாகவும் முருகப்பெருமான் ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும் மயிலை வாகனமாகவும் மாற்றினார்.

✨இந்த நிகழ்வினை அனைவரும் அறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத சுக்கிலபட்ச பிரதமை தொடங்கி துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி என ஆறு நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

✨குறிப்பாக சூரனை வதம் செய்த இடம் என்பதால், திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரபத்மனுடன் முருகன் 6 நாட்கள் போர் புரிந்தபோது, அவரது பக்தர்கள் திருச்செந்தூரில் விரதம் இருந்து தியானித்தனர். அதன்படி, தற்போதும் கந்த சஷ்டியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்.

✨பகைவனை கொல்வது சஷ்டி விரதம் அல்ல. பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே இந்த விரதத்தின் சிறப்பு. யானைமுக சூரனை வெல்வது மாயையை ஒழிப்பதாகவும், சிங்கமுக சூரனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகவும், சூரபத்மனை வெல்வது ஆணவத்தை அழிப்பதாகவும் கருதப்படுகிறது. உண்ணா நோன்பு இருந்தால் ஆணவம் அடங்கும். ஆன்மா இறைவனோடு ஒன்றுபடும். இந்த உயரிய தத்துவத்தை விளக்குவதே கந்த சஷ்டி ஆகும்.

✨இந்த நாட்களில் விரதம் இருந்து ஆறுமுகக் கடவுளை வணங்கினால், நம்முடைய உடம்பிலும் மனதிலும் உள்ள தீய எண்ணங்கள், கெட்ட சக்திகள் அழியும் என்பது ஐதீகம்.

கந்த சஷ்டி விரதம்
💢கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி  தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.
💢அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு  நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
💢விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.

💢ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது. கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.

💢நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும். அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.
மாதவிடாய் காலத்தில் கந்தசஷ்டி விரதம்
⭕மாதவிடாய் காலத்தில் கந்தசஷ்டி விரதம் இருக்க நினைக்கும் பெண்கள், பூஜை அறைக்கு செல்லாமல் விரதம் இருக்கலாம். காப்பு கட்டிக் கொள்ளக் கூடாது. வீட்டில் பெரியவர்கள், உறவினர்கள் இறந்து இருந்தால் ஒரு வருடம் தீட்டு, விரதம் இருக்கக் கூடாது என சிலர் சொல்வதுண்டு. ரத்த சொந்தங்களாக இருந்தால் மட்டுமே ஒரு வருடத்திற்கு விரதம் இருக்கக் கூடாது. மற்றவர்கள் தாராளமாக கந்தசஷ்டி விரதம் இருக்கலாம்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்