கிளீன் ஸ்ரீ லங்காவின் விசேட போக்குவரத்து திட்டங்கள்

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொண்ட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதன் இரண்டாவது நடவடிக்கையாக, பொதுப் போக்குவரத்து பேருந்து சாரதிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, அந்த குற்றங்களுக்கான சட்டத்தை அமுல்படுத்துவதாகும்.

சாரதிகள் மற்றும் பொதுமக்களை அறிவுறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் நேற்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

இதன்போது வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரி பாகங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படும் என பொலிஸார் தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி, குற்றங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த பொது போக்குவரத்து பேருந்துகளில் சிவில் உடை அணிந்த பொலிஸார் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்