மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 6 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலை படிப்படியாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக (இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் நகர்ந்து) தென்மேற்கு வங்கக்கடல் வழியாக டிசம்பர் 08 ஆம் திகதிக்குள் தமிழக கடற்கரையை அடையும் என்று கூறப்படுகிறது.

அந்த அமைப்பின் தாக்கத்தினால் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் மழை மற்றும் காற்றின் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இதேவேளை, இன்று முதல் மறு அறிவித்தல் வரை மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகம் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலைச் சுற்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியிருப்பதே இதற்குக் காரணம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.