யாழ்ப்பாணம் – கண்டி (A9) பிரதான வீதியின் அநுராதபுரம், பூனாவை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
நொரோச்சோலை பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி மீனவர்கள் குழுவொன்று பயணித்த லொறி ஒன்று வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில், பின்னால் வந்த உர மூட்டைகளை ஏற்றிய மற்றுமொரு லொறி, கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தப்பட்டிருந்த லொறியின் மீது கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, லொறியில் பயணித்த மீனவர்களான நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் மேலும் ஒரு மீனவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த நபர் அவசர சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பூனாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.