வைத்தியசாலையில் குப்பை எரிக்கும் இடத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரிக்கை

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை பொது வைத்தியசாலையில் குப்பை எரிக்கும் இடத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குப்பை எரிக்கும் இயந்திரத்தின் ஒரு பகுதி உடைந்து காணப்படுவதினால், அதிலிருந்து வெளியாகும் புகை மூட்டம் நோயாளர்கள் விடுதிக்குள் வருவதுடன் துர்நாற்றமும் வீசுவதாக சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் விடுதிக்குள் குப்பைகள் எரிப்பதினால் புகைமூட்டம் வருவதாகவும்,  உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதே நேரம் குப்பை எரிக்கும் பகுதியில் பிரேத அறை காணப்படுவதாகவும், தொடர்ச்சியாக மக்கள் அப்பகுதியில் நடமாடி வருவதினால் குப்பை அறுக்கும் இயந்திரத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதால் புகைமூட்டம் மேல் நோக்கிச் செல்லாமல் மக்கள் நடமாடும் பகுதிக்குள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நோயாளர்கள் மட்டுமல்லாது வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்ப்பதற்கு வருகை தரும் உறவினர்களும் வைத்தியசாலை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எது வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் விடுதிக்கு பொறுப்பான தாதிய உத்தியோகத்தர்கள் முறைப்பாடு புத்தகத்தில் ‘திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளருக்கு’ எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிய கிடைத்துள்ளது

ஆனாலும் குறித்த வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து வைத்தியசாலை நிர்வாகம் கவனம் எடுத்து குப்பை எரிக்கும் இயந்திரத்தின் உடைந்த பகுதியை புனரமைப்பதற்குரிய நடவடிக்கையின் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.