அரசாங்கத்தில் உள்ள போதை வியாபாரிகளை முதலில் கைது செய்யுங்கள்

-யாழ் நிருபர்-

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களின் பைகளில் போதை பொருளை தேடும் காவல்துறை முதலில் அரசாங்கத்தில் உள்ள போதை வியாபாரிகளை கைது செய்தால் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தலாம் என ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது யாழ். தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ரணில் அரசாங்கம் பாடசாலை மாணவர்களை போதை வியாபாரிகளை தேடுவது போன்று அவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்வதை நிறுத்த வேண்டும்.

நாட்டுக்கு யார் போதை பொருளை கொண்டு வருகிறார்கள் என்பது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் மக்களுக்கும் தெரிந்த விடயம்.

போதைப் பொருள் வியாபாரிகள், குடு வியாபாரிகள், விபச்சார நிலையங்கள், மதுபான நிலையங்கள் என்பவற்றை அரசாங்கத்தில் இருப்பவர்களின் ஆதரவுடனே இடமபெற்று வருகிறது.

இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு அது நன்கு தெரிந்தும் பாதுகாப்பு தரப்பினர் அவர்களை நெருங்காது அப்பாவி மாணவர்கள போதை வியாபாரிகளாக தேடுதல் செய்கிறார்கள்.

இவர்களின் நோக்கம் போதைவஸ்தை ஒழிப்பதல்லஇ நாட்டை பதட்ட நிலையில் வைத்திருந்து தமது அரசியல் இலாபங்களையும் சுக போகங்களையும் அனுபவிப்பதே.

இவர்களுடைய முற்போக்கு சிந்தனையினால் பாடசாலை மாணவர்களை அசௌகரியப்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கு உள நீதியான அழுத்தத்தை வழங்குவதற்காகவும் இந்த அரசாங்கம் அவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்து வருகிறது.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு மதுபான நிலையங்கள் உள்ளதோடு பலர் போதை வாஸ்து வியாபாரங்களிலும் ஈடுபடுகின்றனர்.

நாட்டில் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நாட்டுக்குள் போதைப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களை முதலில் கைது செய்ய வேண்டும்.

அவ்வாறில்லாமல் அப்பாவி மாணவர்களையும் போதை வியாபாரிகளாக இந்த அரசாங்கம் காட்ட நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

தற்போது நாட்டில் மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ள நிலையில் இனி வரும் காலங்களில் 10 -12 மணித்தியாலங்கள் மின்வெட்டி அமுல்படுத்த நேரிடும் என மின்சார சபைப் பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனை தடுப்பதற்கு போதிய நிலக்கரியினை இறக்குமதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அரசாங்கம் அலட்சியப் போக்கில் செயல்படுகிறது.

கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் பாரிய மோசடிகள் இடம் பெற்றுள்ள நிலையில் மோசடிக்காரர்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

ஆகவே இவ்வருடம் கொடூர ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் சிறந்த பாடத்தை புகட்டி உள்ள நிலையில் இவரிடம் மக்களின் புரட்சிக்குரிய வருடமாக நிறைவடைய உள்ள நிலையில் தொடர்ந்து மக்கள் புரட்சி மூலம் சிறந்த ஒரு ஜனநாயக மக்கள் அரசாங்கத்தை ஏற்படுத்த அனைவரும் ஓர் அணியில் இணைய வேண்டும், என அவர் மேலும் தெரிவித்தார்.