கிழக்கில் அரிசியை நியாய விலையில் பெற சீன அரசாங்கத்துடன் ஆளுனர் பேச்சு

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அண்மையில் சீன அரசாங்கத்திடம் அடுத்த பருவத்திலும் கடந்த பருவத்திலும் விவசாயிகளுக்கு இலவச அரிசியை வழங்குவதற்கு பதிலாக சந்தை வாரியத்தின் மூலம் கொள்வனவு செய்ய நிதியுதவி வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

சீன தூதுக் குழுவுடனான சந்திப்பொன்று திருமலையில் அண்மையில் இடம் பெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் விவசாயிகள் நெற் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதுடன் நுகர்வோரும் அரிசியை நியாயமான விலையில் வாங்க முடியும்.

மேலும், இதன் மூலம் அரிசி கொள்முதல் செய்வதற்கு அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு அரசு நிதி ஒதுக்குவதில் உள்ள சிரமம் நீங்கும் என்றும் ஆளுநர் கூறினார்.

சீனாவின் வூஹான் மாகாண மக்கள் சங்கத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சூரிய ஒளி விளக்குகளை அன்பளிப்பாக வழங்கியமைக்கு தனது விசேட நன்றிகளைத் தெரிவித்த ஆளுநர், விவசாய அபிவிருத்திக்கான மேற்படி முன்மொழிவுக்கு ஆதரவளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

விவசாய அமைச்சின் அறிக்கையின்படி எதிர்வரும் பருவத்தில் 609,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் விவசாயிகளின் நெற்பயிர்களை சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் அது விவசாயிகளுக்கு மேலும் உதவிகரமாக அமையும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மாகாணத்தின் சுத்தமான குடிநீர் தேவைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சீன தூதுக்குழுவிடம் அவர் கேட்டுக் கொண்டார்.