2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 4 கஜமுத்துக்களுடன் மூவர் அராவ கரந்தகஹமட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பிபில, மாத்தளை மற்றும் பகமூன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 49, 31 மற்றும் 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹாலிஎல, உடுவர முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, ஒற்றர் ஒருவரைப் பயன்படுத்தி நேற்று திங்கட்கிழமை இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர்கள் வசம் இருந்த கஜமுத்துக்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு துண்டுகளை அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
சந்தேகநபர்கள் அராவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.