பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர், பதவி விலகுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அவர் விரைவில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 10 டவுனிங் வீதியை விட்டு வெளியேறவுள்ளார்.
இந்தநிலையில் பிரித்தானிய அரசியலில் தலைவர்கள் மாறினாலும், கடந்த 15 ஆண்டுகளாக அங்கு நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டுள்ள ‘லாரி’ (Larry) என்ற பூனை, தற்போது தனது 7ஆவது பிரதமரை வரவேற்கத் தயாராகி வருகிறது.
19 வயதான இந்த பூனை, பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ “தலைமை எலி பிடிப்பவராக” (Chief Mouser) கடமையாற்றி வருகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் குடும்பத்தினரால் ‘பெட்டர்சி நாய் மற்றும் பூனைகள் இல்லத்திலிருந்து’ இது தத்தெடுக்கப்பட்டது.
அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட உடைமையாக இல்லாமல், டவுனிங் வீதியின் உத்தியோகபூர்வ குடியிருப்பாளராகக் கருதப்படும் லாரி, அங்குள்ள எலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளது.
பிரித்தானிய அரச மற்றும் அரசாங்கக் கட்டடங்களில் பூனைகளை வளர்க்கும் இந்த பாரம்பரியம் மன்னர் ஹென்றி VIII காலத்திலிருந்தே தொன்றுதொட்டு நிலவி வருகிறது.
லாரி பூனை, ஊடகவியலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு பிரபலமாக மாறியுள்ளது.
பிரித்தானிய அரசியலில் ஏற்படும் தொடர் மாற்றங்களுக்கு மத்தியிலும், டவுனிங் வீதியின் நீண்டகால குடியிருப்பாளராக லாரி தனது கடமையைத் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது