-மன்னார் நிருபர்-
மன்னார் தாராபுரம் பகுதியில், விபத்தில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயது ஏழு மாதம் ஆன குழந்தையின் சடலம் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, மன்னார் தாராபுரம் மையவாடியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டது.

தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள, துருக்கி சிற்றி பகுதியில் கடந்த 18ம் திகதி மாலை, பாண் விற்பனை செய்வதற்காக சென்ற மின் களத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி, வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டு வளாகத்தில் இருந்து வெளியே வந்த குழந்தை, முச்சக்கர வண்டியில் அடிபட்டதாக கூறப்பட்ட நிலையில், குழந்தையை உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் குறித்த குழந்தை இறந்து காணப்பட்ட நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் சடலம் குறித்து மேலதிக நடவடிக்கையின் பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, கடந்த 19ஆம் திகதி தாராபுரம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

குறித்த சடலம் தொடர்பில் மன்னார் பொலிஸ் தரப்பினர் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நல்லடக்கம் நடந்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக, மன்னார் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை, விசாரணைகளுக்காக குறித்த குழந்தையின் சடலம் தோண்டி எடுக்க உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், நீதவான் முன்னிலையில் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

குறித்த அகழ்வு பணியின் போது, மன்னார் பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் உள்ளடங்களாக பொலிஸார் மற்றும் அனைத்து தரப்பினரும் குறித்த மையவாடி பகுதியில் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.