நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
நேற்று இடம்பெற்ற மோதலில் கைதிகள் இருவர் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று ஏற்பட்டுள்ள புதிய மோதல் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மதியம் 1 மணியளவில் விளக்கமறியல் கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வன்முறைக்குக் காரணமாக அமைந்தது.
பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் கடும் முயற்சியால் இன்று காலை நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும், சில மணிநேரங்களிலேயே மீண்டும் பதற்றம் மூண்டுள்ளது சிறைச்சாலை நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
தற்போது சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.