குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்படும் என அளவீட்டு அலகு தர நிர்ணயம் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறைந்த எடை கொண்ட பாண் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பாண் தேவையான எடையில் இல்லை என புகார்கள் வந்ததையடுத்து சில இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, எடை குறைவாக பாண் விற்பனை செய்த 70 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், பாண் உள்ளிட்ட பேக்கரி தொழிலுக்கு சலுகைகளை வழங்காமல், சோதனை நடத்தி பயனில்லை என பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்தது
அத்துடன், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கமும் கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாட்டை நடத்தி, பாணின் விலை மற்றும் எடை தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்தியது.