சமூக ஊடகங்களில் பரவி வரும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரைத் தாக்கும் காணொளியில் இடம்பெற்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரைத் தாக்கும் காணொளி ஒன்று கடந்த புதன்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளானவர் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னியார எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஆவார். இந்தச் சம்பவம் புதன்கிழமை அன்று பிற்பகலில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று மிரிஹான பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 34 வயதுடையவராகவும், கோட்டை – மாதிவெல பகுதியில் வசிப்பவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் QR குறியீடு (QR Code) இன்றி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் பெற வந்தபோது, QR குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்க முடியாது என பம்ப் இயக்குநர் தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து இத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இத் தாக்குதல் தொடர்பாக மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, தாக்குதலுக்கு உள்ளான எரிபொருள் நிலைய ஊழியர், இச்சம்பவத்தை பொலிஸார் சமரசமாகத் தீர்த்துவைக்குமாறு கோரியுள்ளார்.
அதன்படி, தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டு, விவகாரம் சமரசமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான ஊழியரும் மேலதிக வாக்குமூலம் வழங்கி, இந்த முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க விருப்பமில்லை எனக் கோரிக்கை விடுத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.