ஊழல் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தக் கொள்கைகளுடன் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகிய இருவரின் முதல் 18 மாத கால நாடாளுமன்றச் செயல்பாடுகள் தொடர்பான ஒப்பீட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பை தளமாகக் கொண்ட ‘வெரிட்டே ரிசர்ச்’ என்ற ஆய்வு நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆட்சியின் முதல் 6 மாதங்களில் மைத்ரிபால சிறிசேனவின் நிர்வாகமே சட்டம் இயற்றுவதில் முன்னிலையில் இருந்தது. அப்போது அநுரவின் நிர்வாகத்தை விட மூன்று மடங்கு அதிக சட்டமூலங்களை சிறிசேன அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டதுடன், இரண்டு மடங்கு அதிக சட்டங்களையும் நிறைவேற்றியது.
எனினும், 9 மாத காலப்பகுதியில் அநுர குமாரவின் நிர்வாகம் சட்டங்களை நிறைவேற்றுவதில் சிறிசேனவின் அரசுக்கு நிகராக முன்னேறியது. தொடர்ந்து 18 மாத கால முடிவில், அநுரவின் நிர்வாகம் 32 சட்டங்களை நிறைவேற்றி முன்னிலை பெற்றுள்ளது.
இதே காலப்பகுதியில் மைத்ரிபால சிறிசேனவின் நிர்வாகத்தால் 20 சட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருந்தன.
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒட்டுமொத்த சட்டமூலங்களின் எண்ணிக்கையில் மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கம் 54 சட்டமூலங்களுடன் முன்னிலையில் இருந்தது. அநுரவின் அரசாங்கம் 50 சட்டமூலங்களையே வெளியிட்டது.
இருப்பினும், தான் வெளியிட்ட சட்டமூலங்களில் பெரும்பாலானவற்றைச் சட்டங்களாக மாற்றுவதில் அநுரவின் நிர்வாகம் அதிகத் திறன் காட்டியுள்ளது.
மைத்ரிபால சிறிசேனவின் முதல் 18 மாதங்களில் நாடாளுமன்றம் 126 நாட்கள் கூடியது. அநுர குமாரவின் ஆட்சியில் நாடாளுமன்றம் 136 நாட்கள் கூடியுள்ளது. இவ்விரு ஆட்சிக் காலங்களிலுமே தலா ஒரு இடைக்கால பாதீடும், ஒரு முழு ஆண்டுக்கான பாதீடும் சமர்ப்பிக்கப்பட்டன.
முன்மொழியப்படும் சட்டமூலங்களை இறுதிச் சட்டங்களாக மாற்றுவதில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை விட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அதிக வேகத்துடனும் வினைத்திறனுடனும் செயல்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் தனது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.