-கொழும்பு-
பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தை சான்றுப்படுத்திக் கையெழுத்திட்டு சட்டமாக நடைமுறைக்கு கொண்டுவந்த சபாநாயகரின் செயலுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.
இணையவெளி பாதுகாப்பு சட்டத்தை சான்றுப்படுத்திய சபாநாயகரின் செயல் சட்டரீதியாக செல்லுபடியற்றது என்று பிரகடனம் செய்யுமாறு சுமந்திரன் தனது மனுவில் உயர் நீதிமன்றத்தைக் கேட்டிருக்கிறார்.
அந்த சட்டமூலம் பாராளும்றத்தில் விவாதிக்கப்பட்டபோது குழு நிலையில் சேர்க்கப்பட்ட திருத்தங்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்மானங்களுக்கு இசைவானவையாக அமைந்திருக்கவில்லை என்று சபாநாயகருக்கும் பாராளுமன்றத்துக்கும் ஆலோசனை கூறுவதற்கு தவறியதன் மூலம் சட்டமா அதிபர் அரசியலமைப்பின் சரத்துக்கள் 12(1) மற்றும் 14 மூலமாக மனுதாரருக்கும் குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறியிருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருககிறது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவும் சடடமா அதிபர் சஞ்சய் இராஜரத்தினமும் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.
சட்டத்தரணி ராஜ் மோகன் பாலேந்திரா ஊடாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.