தேசிய கொள்கைகளை திட்டமிடுவது தொடர்பான குழு கூட்டம்

 

தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கானஇ சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இக்கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் நிதி ஆணைக்குழுவின் தலைவர் சுமித் அபேசிங்க ஆகியோரும் பங்கேற்றனர்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் பிரகாரம், தேசிய கொள்கைகளை திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் தேசிய சபையொன்று நியமிக்கப்பட்டதாகவும், அதன் கீழ் 02 உபகுழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று செயற்படும்.

அதன் கீழ், நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அவசியமான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்காக தேசிய சபை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த உபகுழு கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதற்தடவையாக கூடியபோதேஇ ‘தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான சிரேஷ்ட அதிகாரிகள் குழு’ நியமிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு முதல் அடுத்த 25 வருடங்களுக்கான தேசியக் கொள்கையை உருவாக்குதல் எனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் நோக்கை நிறைவேற்றம் பொறுப்பு இக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய புதிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை டிசம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்புமாறு ஜனாதிபதியின் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் இதன்போது நாட்டில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய கொள்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கினார்.

புதிய தேசியக் கொள்கையின் வரைவு 27.12.2022 ஆம் திகதிக்குள் தயாரிக்கப்பட்டு, குழு உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டு இறுதி அறிக்கை 15.01.2023 ஆம் திகதிக்குள் சட்ட மூலமாக தயாரிப்பதற்காக, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்தா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.