-திருகோணமலை நிருபர்-
சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் (Serving Humanity Foundation) கிண்ணியா அமைப்பினரின் ஊடாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேச செயலகங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் மற்றும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
இத்திட்டத்திற்கான நிதியுதவியை தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் இயங்கி வரும் SELAVIP நிறுவனம் வழங்கியதுடன்,
கிண்ணியாவில் இயங்கி வரும் சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் அமைப்பினரின் மேற்பார்வையில் இந்த 100 மலசலகூடங்களும் 10 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் 57, மூதுர் பிரதேசத்தில் 20, தம்பலகாமப் பிரதேசத்தில் 10, பதவி சிறிபுர பிரதேசத்தில் 10 மலசலகூடங்களும், கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசத்தில் தலா 05 வீடுகளும் இந்நிதிவுதவியின் மூலம் பயனாளிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டன.
மேற்படி இத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி தலைமையில் நிறுவனத்தின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது.
06 மாதங்களாக இடம்பெற்ற கட்டுமானப் பணிகள் யாவும் இம்மாதம் நிறைவுபெற்று உரிய பயனாளிகளுக்கு மலசலகூடங்கள் மற்றும் வீடுகள் கையளிக்கப்பட்டன.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 2023ம் ஆண்டுக்கான மலசலகூட வசதிகள் அம்மாவட்டத்தில் உள்ள கஷ்டப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு இந்நிறுவனத்தின் நிதியுதவின் மூலம் அமைத்து தரப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.