உயிர்ப் பாதுகாப்புக்காகப் பாதுகாப்பு ஆயுத (துப்பாக்கி) அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள், தங்களது துப்பாக்கிகளுக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கு இணங்க, அனுமதிப்பத்திரத்தைப் பெற்று ஒரு வருடம் நிறைவடைந்தவுடன், தமக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் துப்பாக்கியைச் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பாதுகாப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.
அங்கு, துப்பாக்கியின் செயல்பாடு மற்றும் அதன் இலக்கமானது அனுமதிப்பத்திரத்தில் உள்ள இலக்கத்துடன் ஒத்துப்போகிறதா என்பது பரிசோதிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் பெறப்பட வேண்டும் என உயிர்ப் பாதுகாப்புத் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்ட அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வருடமும், உயிர்ப் பாதுகாப்புத் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்களின் துப்பாக்கிகள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை மேற்கூறியவாறு பரிசோதித்து, அச்சான்றிதழை வழங்கித் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, 2026 ஆம் ஆண்டிற்குரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்று ஒரு வருடம் நிறைவடைந்தவுடன், தமக்கு அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் துப்பாக்கியை நேரில் கொண்டு சென்று, அதன் செயல்பாடு மற்றும் இலக்கத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுமாறு, அந்தந்த வருடத்திற்குரிய உயிர்ப் பாதுகாப்புத் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்ட அனைத்து உரிமையாளர்களையும் இலங்கை பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.