தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டுத் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட தூர இடங்களுக்கு திரும்புவதற்காக இன்று சனிக்கிழமை நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
குறிப்பாக ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக இன்று வரை மலையக புகையிரத சேவைகள் முழுமையாக இல்லாததால் நுவரெலியா பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள், பேருந்துகள் போதியளவு சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை, என தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் நுவரெலியாவில் வசந்த காலம் கொண்டாடப்படுவதால் அதிகமாக வெளி மாகாணங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பேருந்து சேவையை நம்பி வருவது வழக்கமாகும், இவ்வாறு அதிக பயணிகள் வருகை தருவார்கள் என தெரிந்தும் போதுமான பேருந்துகள் இல்லை என குற்றம் சுமத்துகின்றனர்.
பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தலைநகர் உள்ளிட்ட இடங்களுக்குத் திரும்புவதற்காக விசேட பேருந்து சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ள போதிலும் நுவரெலியாவில் இருந்து நீண்ட தூர பேருந்துக்கள் முறையாக இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.