முஸ்லிம்களின் இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சமஸ்டி தீர்வுத்திட்டத்தை முஸ்லிம்கள் எதிர்ப்போம்

-கல்முனை நிருபர்-

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் சமஸ்டி தீர்வுத்திட்டத்தை கிழக்கின் கேடயம் எதிர்க்கும், அதன் பாதகங்களை மக்கள் மயப்படுத்துவோம். வரவு செலவு வாக்கெடுப்புக்கு பின் வருகின்ற சுதந்திர தினத்துக்கு முன்னர் சிறுபான்மை மக்களில் பிரச்சினைகளுக்கு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி கூறியிருப்பதனை வைத்து தமிழ்த்தரப்பு கட்சிகள் சமஸ்டி முறையிலான தீர்வுத்திட்டத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்பது நியாயமானதே, ஆனால் முஸ்லிம் மக்களை நசுக்கத்துடிக்கும் சமஸ்டி முறைக்கு நாங்கள் ஒத்து ஊதுகுழல் ஊத முடியாது. அதிகாரப்பகிர்வு என்பது மத்திய அரசு அளவோடு பகிர்ந்தளிக்கும் அதிகாரங்களை தேவை ஏற்படின் பாராளுமன்றத்தின் 3/2 பெரும்பான்மையுடன் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால், சமஸ்டி என்பது மாநில அரசாங்கம் நினைத்தால் மாத்திரமே மத்திய அரசாங்கத்தினால் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் அதாவது ஒருநாட்டுக்குள் தனிநாடு போன்றதாகும். அதிகாரப்பகிர்வு வழங்கப்பட்ட இணைந்திருந்த வடகிழக்கிற்குள் முஸ்லிம்களை நீங்கள் நசுக்கியதையும் எங்களுக்கு கழிவுகளை கொடுத்து கழிவிரக்கம் காட்டியதையும் நாங்கள் மறந்துவிடவில்லை.

இதனால் தான் முஸ்லிம் கட்சிகள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து நமக்கு தேவையான தீர்வுத்திட்டத்தினை வரைவதற்கும் எமது மக்கள் தொடர்பான பிரச்சினைகளை பட்டியலிட்டு தீர்வினை உருவாக்கவும் அழைப்பு விடுத்தோம்.

அவைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே அரசியல் கட்சிளின் தலைவர்களுக்கு இருந்தது மக்களும் அவ்வாறு இருந்துவிட முடியாது ஏனென்றால் இது உங்கள் குழந்தைகளின் எதிர்காலமாகும், என்றார்