சுற்றுலா பயணிகளுக்காக புதிய மொபைல் செயலி அறிமுகம்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய மொபைல் செயலி (APP) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுற்றுலா மற்றும் காணி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்ததுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த கையடக்க செயலியை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த அப்ளிகேஷனின் மூலம் சுற்றுலாப் பயணிகள் தங்கள் இருப்பிடத்தை அவர்கள் விரும்பினால் பார்க்க அனுமதிக்கலாம் என்றும், தொலைந்து போனாலோ அல்லது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தாலோ, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் அமைச்சர் மேலும் விளக்கினார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஒவ்வொரு கடற்கரையிலும் சுற்றுலாப் பொலிஸ் குழுவொன்று நிறுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக 2023ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,  அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ  தெரிவித்தார்.