உலகக் கிண்ண வரலாற்றில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்.
நேற்றைய தினம் டல்லாஸ் (Dallas) நகரில் ஜோர்டான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினாவுக்காக கோல் அடித்ததன் மூலம், அவர் ஜஸ்ட் ஃபோன்டைன் (Just Fontaine) மற்றும் ஜெய்ர்சின்ஹோ (Jairzinho) ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார்.
போட்டியின் 80ஆவது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய மெஸ்ஸி, 25 மீற்றர் தூரத்திலிருந்து ‘ஃப்ரீ கிக்’ மூலம் பந்தை வலைக்குள் செலுத்தி அணியின் கோல் எண்ணிக்கையை 3-1 என உயர்த்தினார்.
மெஸ்ஸியின் இந்தத் தொடர் கோல் சாதனை, கட்டாரில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அர்ஜென்டினாவின் 2-1 என்ற வெற்றியின் போது தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு எதிராகவும் அவர் கோல் அடித்தார்.
பின்னர் பிரான்ஸுடன் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களை அடித்து, இறுதியில் உலகக் கிண்ணத்தையும் கைப்பற்றினார்.
அவர் தனது இந்த கோல் வேட்டையை 2026 உலகக் கிண்ணத் தொடரிலும் தொடர்ந்துள்ளார். இத்தொடரில் அல்ஜீரியாவுக்கு எதிராக ஹெட்-ட்ரிக் (Hat-trick) கோல்களையும், அர்ஜென்டினாவின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரியாவுக்கு எதிராக இரண்டு கோல்களையும் அவர் அடித்திருந்தார்.
தற்போது ஜோர்டான் அணிக்கு எதிராக அடித்த கோலுடன் சேர்த்து, உலகக் கிண்ணப் போட்டிகளில் அவர் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து புதிய சாதனையாகப் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர், பிரான்ஸ் வீரரான ஜஸ்ட் ஃபோன்டைன் 1958 ஆம் ஆண்டிலும், பிரேசில் வீரரான ஜெய்ர்சின்ஹோ 1970 ஆம் ஆண்டிலும் தொடர்ச்சியாக 6 உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.