-அம்பாறை நிருபர்-
வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை, சாரதிக்கு தெரியாமல் 16 வயது சிறுவன் செலுத்த முற்பட்ட போது, குறித்த வேன் மின்சார கம்பம், சமிஞ்சை கம்பம், சைக்கிள் மற்றும் கடைகள் மீது மோதுண்டு பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான சந்தை வீதியில் இன்று சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வியாபாரி ஒருவர் குறித்த வேனில் மரக்கறிகளை சந்தைக்கு எடுத்து வந்து விட்டு, வேறொரு வேலைலை காரணமாக வேனை அங்கு நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
அச்சமயம் குறித்த 16 வயதுடைய சிறுவன் வேனின் சாவியை திருடி வண்டியை இயக்கிச் சென்ற போது இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது, மின்சார கம்பம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான சமிஞ்சை கம்பம், கடைகளின் பொருட்கள், சைக்கிள் என பலவற்றுடன் குறித்த வேன் மோதிச் சென்றுள்ளது.
அதனைத்தொடர்ந்து விபத்தினை ஏற்படுத்திய 16 வயது சிறுவன் அருகில் இருந்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சிறுவன் தனக்கு தெரியாமல் தனது வேனின் சாவியை திருடிச் சென்றுள்ளதாக வேனின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.