-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளரின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக சுமார் 20 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஜேர்மன் மக்கள் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தின் அனுசரணையில், (international Human Rights Global Mission) அமைப்பின் ஒருங்கிணைப்புடன் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வைத்தியசாலைக்குத் தேவையான இந்த மருத்துவ உபகரணங்கள் இன்றைய தினம் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நோயாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் இயன்முறை மருத்துவ (Physiotherapy) உபகரணங்கள்,சேலன் தாங்கிகள்,ஊன்று கோல்கள் போன்ற அத்தியாவசிய உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

குறித்த மருத்துவ உபகரணங்களை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.ஆஸாத் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களிடமிருந்து பெற்று கொண்டார்.
முன்னதாக, சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் ஒழுங்கமைப்பில் சுமார் 70 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
