-அம்பாறை நிருபர்-
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை, தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த பிக்குவை, மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள விகாரையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, சந்தேகநபரான பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது, விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகளில் 3 இளம் பிக்குகள் அண்மையில் தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள், விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், 2 இளம் பிக்குகள் வாக்குமூலம் பெறுவதற்காக விகாரையில் இருந்து பொலிஸாரினால் அழைத்து செல்லப்பட்ட நிலையில், குறித்த சந்தேக நபரான 41 வயது பௌத்த பிக்கு தப்பி சென்றிருந்தார்.
பின்னர் மற்றுமொரு பௌத்த பிக்கு சகிதம் 41 வயதுடைய பௌத்த பிக்கு, மத்திய முகாம் பொலிஸாரிடம் சரண் அடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
அத்துடன், குறித்த சம்பவத்தில் வாக்குமூலம் வழங்கிய இரு இளம் பிக்குகளில், பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இளம் பிக்குவை மத்திய முகாம் பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்காக அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பிக்குவை, அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.