-அம்பாறை நிருபர்-
போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், பல குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
36 வயதுடைய குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் சென்ற வேளை, அவர் பொலிஸாரை தாக்க முயன்றதுடன் பொலிஸாரிடமிருந்து தப்பி சென்றிருந்தார். இதன்போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் இடது காலில் காயமடைந்ததுடன், மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்திருந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
இந்நிலையிலேயே குறித்த சந்தேகநபர் நேற்று மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேகநபர், நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சூட்சுமமாக விநியோகித்து வந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும், சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.