திருக்கோவில் பிரதேசத்தில் காணி அளிப்பு பத்திரம் வழங்கி வைப்பு

-தம்பிலுவில் நிருபர் –

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் நீண்ட காலமாக அரச காணிகளில் குடியிருந்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பொதுமக்களுக்கான காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது இன்று புதன்கிழமை திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்காக பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம வருகை தந்து கலந்து கொண்டதுடன் 100 பயனாளிகளுக்கான அளிப்புப் பத்திரங்கள் இன்றைய நிகழ்வினூடாக பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் தற்போது 2024 ம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைய ஜனாதிபதியின் “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 633 அளிப்புக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற விடயமும் திருக்கோவில் பிரதேச செயலாளரால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அரசாங்க அதிபரின் உரையில் 1800 அளிப்புக்கள் “உறுமய” வேலைத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 633 அளிப்புக்கள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் இது மொத்த எண்ணிக்கையில் 35சதவீதம் என்பதும் குறிப்பிடப்பட்டது.

இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நிருபா மற்றும் நிருவாக உத்தியோகத்தர், கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.