தனக்கு அருகே உறங்கிக் கொண்டிருந்த தனது மகளை, காதலனுடன் இணைந்து துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் தாயின் காதலனான சந்தேகநபர் ஆகிய இருவரையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் கடந்த மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய தம்புள்ளை கலேவலை பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு, 18 வயதுடைய மகனும் மற்றும் 14 வயதுடைய மகளும் உள்ளனர்.
குறித்த பெண் 50 வயதான சந்தேக நபருடன் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி, அவருடன் உறவில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் தனது காதலனான நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்த சந்தேகநபரை காண தனது 14 வயது மகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு, அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதிக்கு வந்துள்ளார்.
இதன்போது, சந்தேகநபரான காதலன் குறித்த பெண்ணையும், அவரது மகளையும் வீடு ஒன்று எடுத்து அங்கு தங்க வைத்துள்ளார்.
அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் உள்ள ஒரு கட்டிலில் மூவரும் உறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவில் குறித்த பெண்ணும் அவரது காதலனும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து அருகில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியுடனும் குறித்த 50 வயது சந்தேகநபர் உடலுறவில் ஈடுபட முயன்றுள்ளார்.
அவ்வேளை சிறுமி அபயக்குரல் எழுப்பி கத்தியபோது, சிறுமியின் தாய் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் வாயினை பலவந்தமாக மூடியதுடன், காதலனுக்கு ஒத்தாசை வழங்கியதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து சந்தேகபர் தலைமறைவானார்.
சுமார் 3 மாதங்களின் பின்னர், தலைமைறைவாகி இருந்த 50 வயதான சந்தேக நபர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் வைத்து கடந்த 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர் பிரதான சந்தேகபரும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில், கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம்.சுவர்ணகாந்தி, உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க, கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ.ஆதம்பாவா(44138) மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள பாதுகாப்பான சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் வைத்திய பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்.