சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் அதிக பயணிகளுடன் பேருந்தை பிரதான வீதியில் செலுத்திய வந்த சந்தேக நபர் ஒருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார், என ஹட்டன் தலைமையகத்தின் பிரதம பொலிஸ் ஆய்வாளர் டபிள்யூ.ஆர்.ஏ.டி.சுகததாச தெரிவித்தார்.
சந்தேக நபர் ஹட்டன் – டிக்கோயா சலங்கந்த பகுதியிலிருந்து தினமும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்தை இயக்கி வந்துள்ளார்.
மேலும், இடைநடுவில் பேருந்து சாரதியிடம் ஒப்படைக்கப்படும் என்ற தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது என தலைமையகத்தின் பிரதம பொலிஸ் ஆய்வாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும், குறித்த பேருந்து ஹட்டன் – சலங்கந்த வழியாக அதிக ஆபத்தான செங்குத்து மற்றும் வளைவுகள் கொண்டது எனவும் இதனால் பயணிகளின் நலன் கருதி விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு குறித்த நடவடிக்கை எடுத்ததாக பொலிஸ் தலைமையகத்தின் பிரதம ஆய்வாளர் தெரிவித்தார்.
எனவே, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் தனியார் பேருந்து ஒன்றினை பிரதான வீதிகளில் இயக்கிய குற்றச்சாட்டிலும் , சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் பேருந்து ஒன்றினை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பேருந்தின் உரிமையாளர் மீதும், ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.