பாடசாலை மாணவர்களுக்கு வழங்க கீரை தூள் பரிசோதனை

 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் போசாக்கு உணவு திட்டத்தின் கீழ் கல்முனை ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி பிரிவினால் போசாக்கு நிறைந்த கீரை வகைகளை அரைத்து உருவாக்கப்பட்ட தூள் மூலம் இலை கஞ்சி தயாரிக்கப்பட்டு பணிமனையின் பிரிவு தலைவர்களுக்கு பரிசோதனைக்காக வழங்கப்பட்டது.

எதிர்காலத்தில் போசாக்கு மட்டம் குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த தூள் சிறுவர்களை கவரும் விதத்தில் சுவை மிகுந்ததாகவும், அதேவேளை எந்த ஒரு செயற்கை நிறமூட்டிகளோ சுவையூட்டிகளோ சேர்க்கப்படாமலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அரசாங்க தரப்பில் இருந்தும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்தும் நிதி கோரப்பட்டுள்ளது.

குறித்த நிதி கிடைக்கும் பட்சத்தில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள போசாக்கு குறைந்த மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு இலவசமாக இந்த போஷாக்கு தூள் கஞ்சியுடன் சேர்த்து அல்லது வேறு வகை உணவுகளில் சேர்த்து வழங்கப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் ரிபாஸ் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி எம் ஏ நபீலினால் இணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதிபணிப்பாளர் மற்றும் பணிமனையின் பிரிவு தலைவர்கள் பங்குபற்றினார்கள்.

கடந்த காலங்களில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தயாரிக்கப்பட்ட போசாக்கு உணவு திட்ட பிரேரணை ஜனாதிபதியிடமும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-கல்முனை நிருபர்-