மட்டக்களப்பு புணானை பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நிகழ்வில் கலந்து கொண்டு விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார்.
பெயர்பலகையை திரைநீக்கம் செய்து விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதுடன் மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
அதனைத்தொடர்ந்து இலங்கையிலுள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இடம்பெற்றது.
மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தை மாணவர்களின் உரிமையாக்குவதுடன் இணைந்து நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.
சர்வமதத் தலைவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ், இராஜாங்க அமைச்சர்களான பிரமித்த பண்டார தென்னகோன், சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியூதீன், ரவூப் ஹக்கீம், அலி சாஹிர் மௌலானா, பைசால் காசிம், ஜகத் சமரவிக்ரம, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் லால் ரத்னசேகர, பிரதி உபவேந்தர் பேராசிரியர் கே.முபாரக், பதிவாளர் பீ.டீ.ஏ.ஹசன், விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹிராஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களுடன் சவூதி இராஜதந்திரிகளும், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெருந்திரளான பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.










மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
