மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் புத்தாண்டு தினமான நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பின் போது, கோழி இறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 57.5 கிலோ கிராம் எடையுள்ள கோழி இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
விபத்துக்களால் மற்றும் நோயால் உயிரிழக்கும் கோழிகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்து, இவ்வாறு குளிர்சான பெட்டியில் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்தமை இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த கடையில் இவ்வாறு ஏற்கனவே உயிரிழந்த கோழிகள் விற்பனை செய்யும் நோக்கில் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததையடுத்து, களுவாஞ்சிக்குடி பிரிவுக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தங்கவடிவேல் கஜானன், குறித்த வியாபாரிக்குக் கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி அனைத்தும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் உடனடியாக அழிக்கப்பட்டது.
பண்டிகைக் காலங்களில் இலாபமீட்டும் நோக்கில் இவ்வாறு தரமற்ற உணவுகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.