வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பருத்திச்சேனை சந்தியில், கடந்த சனிக்கிழமை, சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்லடி விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து, வவுணதீவு தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாமிற்கு சம்பவ தினமான சனிக்கிழமை இரவு பயணித்துக்கொண்டிருந்த வாகனம், பருத்திச்சேனை சந்தியில் வைத்து எதிரே வந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, சைக்கிளில் பயணித்த கன்னங்குடா புதுமண்டபத்தடியைச் சேர்ந்த, அப்புஹாமி கிருஷ்ணபாலன் (வயது 67) என்பவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.